திருஞானசம்பந்தர் தேவாரம்
இரண்டாம் திருமுறை
2.28 கருவூர் ஆனிலை
பண் - இந்தளம்
தொண்டெ லாமலர் தூவி யேத்தநஞ்
சுண்ட லாருயி ராய தன்மையர்
கண்ட னார்கரு வூரு ளானிலை
அண்ட னாரரு ளீயும் அன்பரே.
1
நீதி யார்நினைந் தாய நான்மறை
ஓதி யாரொடுங் கூட லார்குழைக்
காதி னார்கரு வூரு ளானிலை
ஆதி யாரடி யார்தம் அன்பரே.
2
விண்ணு லாமதி சூடி வேதமே
பண்ணு ளார்பர மாய பண்பினர்
கண்ணு ளார்கரு வூரு ளானிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.
3
முடியர் மும்மத யானை யீருரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியு ளார்கரு வூரு ளானிலை
அடிகள் யாவையு மாய ஈசரே.
4
பங்க யம்மலர்ப் பாதர் பாதியோர்
மங்கை யர்மணி நீல கண்டர்வான்
கங்கை யர்கரு வூரு ளானிலை
அங்கை யாடர வத்தெம் மண்ணலே.
5
தேவர் திங்களும் பாம்புஞ் சென்னியில்
மேவர் மும்மதி லெய்த வில்லியர்
காவ லர்கரு வூரு ளானிலை
மூவ ராகிய மொய்ம்ப ரல்லரே.
6
பண்ணி னார்படி யேற்றர் நீற்றர்மெய்ப்
பெண்ணி னார்பிறை தாங்கு நெற்றியர்
கண்ணி னார்கரு வூரு ளானிலை
நண்ணி னார்நமை யாளும் நாதரே.
7
கடுத்த வாளரக் கன்க யிலையை
எடுத்த வன்றலை தோளுந் தாளினால்
அடர்த்த வன்கரு வூரு ளானிலை
கொடுத்த வன்னருள் கூத்த னல்லனே.
8
உழுது மாநிலத் தேன மாகிமால்
தொழுது மாமல ரோனுங் காண்கிலார்
கழுதி னான்கரு வூரு ளானிலை
முழுது மாகிய மூர்த்தி பாதமே.
9
புத்தர் புன்சம ணாதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டுமெய்ப்
பத்தர் சேர்கரு வூரு ளானிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.
10
கந்த மார்பொழிற் காழி ஞானசம்
பந்தன் சேர்கரு வூரு ளானிலை
எந்தை யைச்சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தை யிற்றுய ராய தீர்வரே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com